மருத்துவமனை கட்டிடங்கள் – எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

261 0

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம் மற்றும் சீமாங்க் மைய அறுவை அரங்கம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம்; கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம்; காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 60 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம்; கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவுக் கட்டிடம் ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடம்; பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் உலுப்பகுடி, சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் ஆகிய மூன்று மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்;

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி, நாமக்கல் மாவட்டம் செவிந்திப்பட்டி, விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மற்றும் தேனி மாவட்டம் குமணன்தொழு ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், என மொத்தம் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment