’பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமை மீறப்பட மாட்டாது!

223 0

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தின் (Counter Terrorism Act ) கீழ், கருத்துச் சுதந்திரமோ அல்லது சுதந்திரமாக ஒன்றுகூடுவது தொடர்பிலான எந்தவொரு அடிப்படை உரிமையும் மீறப்படுவதில்லையென, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நேற்று (22), உயர் நீதிமன்றத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான விசேட சட்டமூலம், அரசமைப்புக்கு முரணானதென அறிவிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான சட்ட மா அதிபரின் நிலைப்பாடு, உயர் நீதிமன்றத்தில் நேற்று (22) முன்வைக்கப்பட்ட போதே, மேற்கண்டவாறு கூறப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு தரப்பினர்களால், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோத்தாகொட, மேற்படி சட்டமூலத்தின் கீழ், கருத்துச் சுதந்திரமோ அல்லது சுதந்திரமாக ஒன்றுகூடுவது தொடர்பிலான எந்தவொரு அடிப்படை உரிமையும் மீறப்படுவதில்லை என்று விளக்கினார்.

அத்துடன், குறித்த சட்டமூலத்தை, மிகவும் பயனுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்காக, சட்ட மா அதிபரால், சிற்சில திருத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு, அவை குறித்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மனு தொடர்பான மேலதிக விவரங்கள், இன்றைய தினமும் (23) நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment