காஞ்சூரமோட்டை மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஜனாதிபதி இணைப்பாளர் – சிவசக்தி ஆனந்தன்

226 0

காஞ்சூரமோட்டை யில் மக்கள் குடியேறும் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பி காஞ்சூரமோட்டை என்ற பூர்வீக கிராமத்தில் குடியேறியுள்ள மக்களிற்கு வன இலாகா திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இடையூறுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்,

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியாவிற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்திருந்த மக்கள் தற்போது மீளக்குடியேறி வருகின்றனர். இவ்வாறான நிலையில் வனவளத்திணைக்களம் அப்பகுதி தமது காணியென தெரிவித்து அம் மக்களிக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்துவருகின்றது.

மீள்குடியேறிய அம்மக்கள் வீடுகளை கூட அமைக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்திலும் முடிவுகள் எட்டப்படுகின்ற நிலையிலும் கூட அவற்றை நடைமுறைப்படுத்த முடியாதநிலைமை காணப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலைக்கு ஜனாதிபதியின் இணைப்பாளரும், அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவருமான நபரே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

இவர்  மீள்குடியேறிய மக்களுக்கும் மீள்குடியேற்றத்திற்கு பங்கேற்கும் அரச அதிகாரிகளிற்கும் கொலை அச்சுறுத்தலோடு பல்வேறு அச்சுறுத்தல்களை தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் மேற்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பாக இந்த பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுத்து ஜனாதிபதிக்கு இவ்வாறான நபர்களின் ஊடாக இங்கு எவ்வித வேலைத்திட்டமும் செய்ய முடியாது எனவும் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறான திட்டங்களை முன்னெடுப்பத்தில் சிக்கல் உள்ளதாகவும் எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சரும் இணைத்தலைவரில் ஒருவருமான கே.கே.மஸ்தான் குறித்த நபர் ஜனாதிபதியின் இணைப்பாளர் இல்லை எனவும், அந்நபர் ஜனாதிபதியின் குறித்த சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒருவரே ஆகும். ஜனாதபிதியின் நற்பெயருக்கு அவரூடாக கலங்கம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் இவ்விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும் மீண்டும் கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் செயலாளரில் ஒருவரான முத்து முகமது ஆகியோர் குறித்த நபரை சகல இடங்களிலும் ஜனாதிபதியின் இணைப்பாளர் என்றே விழித்து வருவதாகவும் மாவட்ட ஒருங்கணைப்பு குழு கூட்டத்திலும் அவ்வாறே பதிவிடப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

Leave a comment