சாதனை விளக்க கண்காட்சியில் பொதுப்பணித்துறைக்கு முதல் இடம் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்!

202 0

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சாதனை விளக்க கண்காட்சியில் முதல் இடம் பிடித்த பொதுப்பணித்துறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் சாதனை விளக்க கண்காட்சி இடம் பெற்றது. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு அரங்குகள் வைக்கப்பட்டன.

 இதில் பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சி முதல் இடம் பிடித்தது. சுகாதாரத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை 2-வது இடமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வனத்துறை மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகியவை 3-வது இடமும் பெற்றன.

இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த சான்றிதழ்களை அந்தந்த துறை அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்-அமைச்சர்), டாக்டர் விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் டி.கே.ராமச்சந்திரன், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் எம்.எஸ்.சண்முகம், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் எச்.மல்லேசப்பா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன், செய்தித்துறை இயக்குனர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a comment