இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன!

280 0

இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக (12.10.2018) அன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரிசரின் நியமனம் சான்றாக அமைகின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் தனக்கு தேவையானவர்கள் தனக்கு சார்பானவர்கள் போன்றவர்களையே ஜனாதிபதி பிரதம நீதியரசராக நியமித்தார். 

ஆனால் இன்று அந்த நிலை மாறி அந்த பதவிக்கு ஏற்ற தகுதியானவர்கள், நிறைந்த அனுபவம் கொண்டவர்கள் என அனைத்து விடயங்களையும் பார்த்து உரியவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் (13.10.2018) அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இன்று இந்த ஊவா மாகாணத்திற்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அதற்கு காரணம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 157 வீடுகள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகின்ற நிகழ்வு இந்த நிகழ்வு என்பதால். இந்த பகுதியில் அடிக்கடி மண்சரிவு அபாயம் ஏற்படுகின்றது. எனவே இங்குள்ள மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அதனை அமைச்சர் பழனி திகாம்பரம் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசரும் உங்கள் பகுதியில் கல்வி கற்றவர் என்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அவர் புனித தோமஸ் கல்லூரி கோட்டே மற்றும் குருதலாவ ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இன்றைய தினத்தில் அதுவும் ஒரு முக்கிய விடயமாகும். இன்று இலங்கையில் அநேகமான நியமனங்கள் மிகவும் நேர்மையாக தகுதி அடிப்படையில் வழங்கப்படுவதை நாம் பார்க்கின்றோம்.

ஆனால் கடந்த காலங்களில் முக்கிய பதவிகளுக்கு தகுதி அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படவில்லை. நமக்கு தெரியும் பிரதம நீதி அரசரை எவ்வாறு பதவி நீக்கம் செய்தார்கள் என்று. ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் நேர்மையான முறையில் நியமனங்களை மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி பிரதம நீதி அரசர் தொடர்பாக அரசியல் அமைப்பு சபைக்கு பரிந்துறை செய்தார் அதனை அரசியல் அமைப்பு சபையின் 10 பேர் கொண்ட குழுவினர் ஏகமனதாக அங்கீகாரம் அளித்தபின்பு ஜனாதிபதி மிகவும் திறந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளார்.

எனவே இன்று இலங்கையில் நீதித்துறை மிகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயற்படுகின்றதை இதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இதனையே இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள். நல்லாட்சியின் வெற்றிகள் படிப்படியாக மக்களை வந்து சேரும் எனவும் அதற்காக பொருத்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment