அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் புதிய தொழிற்சாலை திறந்து வைப்பு

238 0
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையை நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை ரத்மலானை கந்தவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜெயிக்கா (JAICA) நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலைக்கு 1,240 மில்லியன் ஜப்பானிய யென்களும் அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு 910 மில்லியன் ஜப்பானிய யென்களும் செலவிடப்பட்டுள்ளன.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய உற்பத்தியின் அளவு வருடத்திற்கு 1,922 மில்லியன் மருந்து வில்லைகளாகும். இந்த புதிய தொழிற்சாலையை நிர்மாணிப்பதன் ஊடாக அதன் உற்பத்தி 3,337 மில்லியன் வில்லைகள் வரை அதிகரிக்கப்படுவதுடன், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவின் 70 சதவீத தேவையை இதனூடாக பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தொழிற்சாலைக்கு மேலதிகமாக 46 வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிக்க சுகாதார அமைச்சு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. அவற்றிற்கு அமைவாக தற்போது ஹொரண, கண்டி மற்றும் திகன பிரதேசங்களில் புதிதாக மூன்று தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் உற்பத்திகளும் மருத்துவ வழங்கற்பிரிவிற்கே வழங்கப்படவுள்ளன. மேலும் மூன்று மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் 2019ஆம் ஆண்டின் முற்பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளன.

2020ஆம் ஆண்டளவில் நாட்டிற்கு தேவையான மருந்துப் பொருட்களின் 90 சதவீதத்தினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் நோக்கிலும் மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் 40 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மீதப்படுத்திக் கொள்ளவும் இதனூடாக வாய்ப்பு கிடைக்கும் என அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

நினைவுப்பலகையை திறந்து வைத்து புதிய மருந்துத் தொழிற்சாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஷால் காசிம், அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சயுர சமரசுந்தர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment