அல்பிட்டிய -அநுராதகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் அநுராதகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நுழைந்து துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் 42 வயதுடைய அநுராதகம , கறன்தெனிய பகுதியை சேர்ந்த தோமையா ஹக்குறு சுஜித் குமார என்பவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அல்பிட்டிய பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்து பிரதான சந்தேக நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் , பிரதான சந்தேக நபர் திங்கட்கிழமை அல்பிட்டிய நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து , சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே வேளை குறித்த கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சந்தேக நபர்கள் மூவரும் இன்று திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் மிறிஸ்வத்தை , கஹனுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்த 24, 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில். மேலதிக விசாரணைகளை அல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

