ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்கவின் கொழும்பிலுள்ள வீட்டிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் 45 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் உள்ளவரை தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இக்கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பில் அரசியல் மேடையில் பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தான் தோல்வியடைந்திருந்தால் தன்னை 10 அடி நிலத்துக்குக் கீழால் போட்டிருப்பார்கள் என ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டுச் சேர்வது ஒருபோதும் சாத்தியமில்லாத ஒன்றாகும். அவ்வாறு சேர்வதாக இருந்தால், அதனை என்னவென்று சொல்வது என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி. ஒருவர் பழைய கதையை நினைவு கூர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

