நாளொன்றுக்கு 105 வாகன விபத்துக்கள் : 8 பேர் உயிரிழப்பு – அஜித் ரோஹன

170 0

இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் 100 முதல் 105 வரையிலான விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாவதாகவும் மேலும் 20 பேர் வரையில் நாளாந்தம் விபத்துக்களால் காயமடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் நேற்று அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நாளாந்தம் 100 முதல் 105 வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகின்றன. அதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 7 முதல் 8 பேர் உயிரிழக்கின்றனர். 20 பேர் வரையில் காயமடைகின்றனர். அப்படிப் பார்க்கும் போது வருடத்துக்கு வாகன விபத்துக்களால் சுமார் 3000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பிலான முழுமையான விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாவை செலவழிக்கின்றது. அப்படியானால் வருடத்துக்கு 3000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி விபத்துக்களின் பின்னரான நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகின்றது. விசாரணையாளர்கள், நீதிமன்ற விசரணை, அரச இரசாயன பகுப்பாய்வு என இதில் செலவுகள் உள்ளடங்கும்.

இவ்விபத்துக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

தண்டப்பணம் அறவிடும் முறைமையை இலத்திரணியல் முறையில் செயற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடனட்டைகள், தொலைபேசிகள் ஊடாக தண்டப்பணம் அறவிடும் வகையில் இந் நடவடிக்கையினை நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதேபோன்று சி.சி.ரி.விகள் ஊடாக அவதானித்து போக்குவரத்து குற்றங்களை முன்னெடுப்போர் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பது குறித்தும், போக்கு வரத்து குற்றங்களில் ஈடுபடுவோரின் சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளி முறையில் செயற்படுவது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment