கர்நாடக அணைகள் மூடப்பட்டது: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3400 கன அடியாக குறைந்தது

326 0

201609221109285609_karnataka-dams-closed-mettur-dam-water-inflow-for-least_secvpfகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடந்த 20-ந் தேதி நிறுத்தப்பட்டு கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மூடப்பட்டன. மேட்டூர் அணை நீர்வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டு 3493 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 20-ந் தேதி அணையின் நீர் மட்டம் 87.68 கன அடியானது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 20-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நாளை (23-ந் தேதி) கல்லணைக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடந்த 20-ந் தேதி நிறுத்தப்பட்டு கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மூடப்பட்டன.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று 8144 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 87.62 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டு 3493 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 86.94 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் அணையின் நீர் மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 20-ந் தேதி காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு நேற்று பெங்களுரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. பிரதான எதிர்கட்சியான பா.ஜனதா இந்த கூட்டத்தை புறக்கணித்தது. அதில் பங்கேற்ற மற்ற அரசியல கட்சியினர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்று ஒருமித்த குரலில் வற்புறுத்தினர்.

பின்னர் மந்திரி சபையையும் கூட்டி முதல்-அமைச்சர் சித்தராமையா விவாதித்தார். மந்திரி சபை கூட்டத்திலும் உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டசபையின்அவசர கூட்டத்தை நாளை (23-ந் தேதி) கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி காவிரியில் மீண்டும் தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுத்துள்ளதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை முடியும் காலம் நெருங்கி விட்டதால் இனி வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியுமா? என்ற பரிதவிப்புக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள 12 ஆயிரம் கன அடி தண்ணீரால் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.