ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு

1539 0

அரசாங்கத்துக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அதனை எதிர்வரும் டிசம்பர் 14ம் துகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உத்தரவிட்டார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அன்றைய தினமும் விளக்கமறியலில் இருந்தால் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2010ல் இருந்து 2014ம் ஆண்டு காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதால் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் ராஜ் பெர்னாண்டோ மற்றும் நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் மொஹிதீன் சாகிர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment