ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிலாளர்கள் கைது!

274 0

ராயப்பேட்டையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்த போலீஸார் அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மறுத்ததால் ஒரு தொழிலாளி மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஊதிய உயர்வுக்காக போராடிய எம்எஸ்ஐ நிறுவன தொழிலாளர்கள் தென்கொரிய தூதரகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் பகுதியில் தென் கொரியாவுக்கு சொந்தமான ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு உதிரிப்பாகங்களை தயாரிக்கும் எம்எஸ்ஐ நிறுவனம் செயல்படுகிறது.

தென்கொரிய நாட்டை சேர்ந்த நிறுவனமான இங்கு 150 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பணியாற்றுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 30 மாதங்களாக நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்காமல் உள்ளது. ஊதிய உயர்வு கேட்டு கடந்த 5-ம் தேதி முதல் நிரந்தர தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகம் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாறாக, ஒப்பந்த ஊழியர்களை வைத்து உற்பத்தி செய்து வருகிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் தலையிட்டு தீர்வு காண தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே போராட்டத்தின் 22 நாளான இன்று சென்னையில் உள்ள தென்கொரிய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க தொழிலாளர்கள் மயிலாப்பூர் கல்யாணி மருத்துவமனை அருகே திரண்டு இருந்தனர். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் தூதரகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் போலீஸார் அடைத்தனர். பொதுவாக இதுபோன்ற அடையாளப்பூர்வமான போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை மண்டபத்தில் அடைத்து வைப்பார்கள். பெயர் விலாசம் வாங்கிக்கொண்டு சாதாரண காவல் போடுவார்கள்.

ஆனால் ராயப்பேட்டை போலீஸார் கைது செய்யப்பட்டவர்களை மண்டபத்தில் அடைத்து கடுமையான காவலைப்போட்டுள்ளனர். இதற்கிடையே தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த எம்எஸ்ஐ நிர்வாகம் முன்வந்துள்ளது. இதனையடுத்து தொழிலாளர் நலத்துறை ஆணையர், காவலில் இருந்த தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

ஆனால் சட்டத்தை கடுமையாக நிலை நாட்டிய உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் பேச்சுவார்த்தைக்கு யாரையும் அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டனர். பின்னர் மதியம் சாப்பாடு கொடுத்த போலீஸார் தண்ணீர் பாக்கெட்ட்டுகளை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் கடுமையான காவலை போட்டு யாரையும் வெளியே விடாமல் காவல் காத்துள்ளனர்.

3 மணிக்குமேல் உள்ளே இருந்த தொழிலாளர்கள் தண்ணீர் தாகத்தால் வாடியுள்ளனர். தண்ணீர் கேட்டபோது போலீஸார் கண்டுக்கொள்ளவில்லை. நாங்களாவது வெளியேச்சென்று தண்ணீர் வாங்கிக்கொள்கிறோம் என்று தொழிலாளர் தரப்பில் கேட்டபோது வெளியே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் தொழிற்சங்கத்தலைவர்கள் மேலதிகாரியான உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்க மறுத்து கட் செய்துள்ளார். சர்க்கரை நோய், பிளட்பிரஷர் காரணமாக வாடும் தொழிலாளர்கள் சிலர் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். ஆனாலும் போலீஸார் மனம் இரங்கவில்லை.

இதனிடையே சங்கிலிகருப்பன் என்கிற தொழிலாளி தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் பிளட்பிரஷர் அதிகமாகி மயங்கி விழுந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காமல் மாலை 6 மணிவரை நேரம் கடத்தவே தொழிலாளர்களே கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தனர்.

மயங்கி விழுந்த சங்கிலி கருப்பனை பின்னர் போலீஸார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விடுதலையான தொழிலாளர்கள் மருத்துவமனைமுன் குவிந்தனர். அவர்களிடம் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேச்சு வார்த்தை நடத்தினார்.

போலீஸ் செய்தது தவறுதான் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும் போலீஸாரின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மனிதாபிமானமிக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பொதுமக்களிடம் மனிதத்தன்மையுடன் நடந்துக்கொள்ளுங்கள் என போகுமிடமெல்லாம் போலீஸ் அதிகாரிகளிடம் அறிவுரையாகவும், வேண்டுகோளாகவும் தெரிவித்தாலும் ராயப்பேட்டை உதவி ஆணையர், ஆய்வாளர் போன்ற காவல்துறையினர் சிலரின் மனிதாபிமானமற்ற செயல் ஒட்டுமொத்த காவல்துறைக்கே கெட்டப்பெயரை ஏற்படுத்துவதாக தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment