யாழிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!ஏன் விசாரணை இடம்பெறவில்லை – சுமந்திரன்

201 0

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

எனினும் கடந்த 20 வருட காலப்பகுதியில் அதிக ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

ஊடக சுதந்திரத்தின் மைல்கல்லாக இக் கொழும்பு பிரகடனம் அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன.

கடந்த காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் யாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை.

கொழும்பு பிரகடனம் ஊடக சுதந்திரம், சமூகப் பொறுப்புணர்வு ஆகிய இரு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. செய்தியை வாசிக்கின்ற வாசகனுக்கென்று பொறுப்புணர்வு உண்டு. அதே வேளை ஊடக சுதந்திரம் என்பது உண்மையை அறிக்கைப்படுத்துவதாகும். ஊடக சுதந்திரத்தை நோக்கிய போராட்டங்கள் இடம்பெறும் அதே வேளை பொய்யான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களும் தற்போது பெருகி வருகின்றன. இது ஊடகங்களின் பொறுப்புணர்வற்ற தன்மையினையே காட்டுகின்றது.

ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி உண்மையான செய்திகளை வெளியிடுவதன் மூலம் சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும். நாட்டில் அதிகரித்து வருகின்ற ஊடகங்களின் பொறுப்புணர்வற்ற தன்மை கவலையளித்தாலும் ஊடக சுதந்திரத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்தி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

Leave a comment