ஜனாதிபதி அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும்-பிரபா கணேசன்

980 61

இன்று தமது விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் இதனை பல முறை செய்து வந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் உண்ணாவிரதத்தின் போது அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு உறுதிமொழி அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைக்கின்றனர்.

இது தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள் செய்வதை வரவேற்கும் அதே வேளையில் அரசாங்கத்துடன் ஆணித்தரமான பேச்சுவார்த்தையினை இன்றைய தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வதன் ஊடாகவே இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை பெறக்கூடியதாக இருக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் அரசியல் கைதிகளுக்காக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மக்களின் பேராதரவினைப் பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய சமூகநல ஸ்தாபனங்களும் கலந்து கொண்டிருந்தன.

கலந்து கொண்டவர்களுக்கு உண்மையிலே நான் நன்றியினை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை இவ் ஆர்ப்பாட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வர முடியுமே ஒழிய இவர்களது விடுதலைக்கு பெரிதளவில் பயன்படும் என நான் நினைக்கவில்லை.

ஏனெனில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது இவ்வாரான ஆர்ப்பாட்டங்களுக்கு தேவை ஏற்பட்டது. ஆனால் இன்று இருக்கும் ஜனாதிபதியினை வெற்றி பெற செய்ததில் தென்னிலங்கை தமிழ் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது.

சுமார் நான்கு இலட்சம் அதிகபட்ச வாக்குகளாலேயே இன்றைய ஜனாதிபதி வெற்றி பெற்றார். இதற்கும் அதிகமான வாக்குகளை வடகிழக்கு, மலையகம், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு அளித்துள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஊடாக அவரால் உடனடியாக இவ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவோ அல்லது பிணையில் விடுதலை செய்யவோ முடியும்.

அதே போல் இன்றைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு அவர்களது வாக்குகளை ஐ.தே.கவுக்கு வாங்கிக் கொடுத்த தென்னிலங்கை அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரின் ஊடாக அழுத்தத்தை கொடுத்து அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு இருக்கும் பொழுது பொது அமைப்புகளும் அரசாங்கத்தில் சம்பந்தப்படாத ஏனைய அரசியல்வாதிகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஏனைய அரச சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டது அவர்களினது மனசாட்சிக்கு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

அதைவிட வவுனியாவில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதி அமைச்சர் கலந்து கொண்டது வேடிக்கையாக இருக்கின்றது.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு ஊடக விளம்பரங்களை பெற்றுக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தென்னிலங்கையை சார்ந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஒன்றிணைந்து தமது தேர்தல் வாக்குறுதிக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான பாரிய அழுத்தத்தினை அரசாங்கத்திற்கு பாராளுமன்ற வளாகத்தினுள் செய்ய வேண்டும்.

அதே நேரம் இவர்கள் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் ஒத்தி வைக்கப்படாத பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இதுவே இன்றைய தேவையாக இருக்கின்றது. பொது ஸ்தாபனங்களும் சமூக நிறுவனங்களும் ஏனைய கட்சியினரும் வெளியில் இருந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவது வரவேற்கதக்க விடயமாகவும் தேவையான ஒன்றாகவும் நான் பார்க்கின்றேன்.

ஆனால் தாம் உருவாக்கிய அரசாங்கத்திற்குள் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இவ் அரசாங்கத்தின் பங்காளிகள் ஆக்கபூர்வமாக இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment