இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக உறவுகளே காணப்படுகின்றன எதிர்காலத்திலும் இந்த நிலையே காணப்படும் என இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
நியுயோர்க் டைம்ஸ் சமீபத்தில் இலங்கை சீனா உறவுகள் குறித்து வெளியிட்டிருந்த செய்திகள் ஆதாரமற்றவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தில் இயங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளது என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் கீழ் துறைமுகத்தை இலாபகரமானதாக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை அவர்கள் அதனை அமைத்து விட்டு அனைத்தும் தானாக நடைபெறும் என வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாங்கள் திட்டமொன்றை தயாரித்துள்ளோம் நான்கு ஐந்து வருடங்களில் அது சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாங்கள் அபிவிருத்தி செய்யவிரும்புகின்றோம் அது சரியான இடத்தில் உள்ளது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரங்களில் சீனாவின் பரந்துபட்ட பங்களிப்பு குறித்து நான் கவலையடையவில்லை எனவும் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். நாங்கள் இது குறித்து அதிகம் கவலையடையவேண்டிய அவசியமில்லை என நான் கருதுகின்றேன்,சீனாவுடனான எங்கள் உறவுகள் வெறுமனே வர்த்தக அடிப்படையிலானவை,எதிர்காலத்திலும் அவ்வாறான நிலையே காணப்படும் அரசியல் அழுத்தங்கள் எதுவும் காணப்படாது என நான் கருதுகின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

