பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மூலோபாயத்திட்டம் தயார்: கோட்டாபய ராஜபக்ஷ

274 0

சரிவடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் மூலோபாயத்திட்டம் எம்மிடம் தயாராக உள்ளது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலனறுவை புலதிசி மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஹெலிய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாட்டின் பொருளாதாரத்தினைச் சரியான முறையில் கையாள்வதற்கான தைரியமும் ஆளுமையும் இருந்தது.

ஆனால் தற்போது முதுகெலும்பற்ற பல அரசியல்வாதிகளின் கையில் நாடு சிக்கியுள்ளதுடன், நாட்டினது பொருளாதார நிலை பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கின்றது.

நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்த எமக்குப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தெரியும்.

அதற்கான தெளிவான சிறந்த மூலோபாயத் திட்டங்களும் அதற்கான அறிஞர்குழுவும் தயாராகவே இருக்கின்றனர். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாட்டினை வழிநடத்தத் தெரியாது.

உறுதியான தீர்மானங்களைத் தைரியமாக மேற்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரின் கீழ் இந்த நாட்டை மீண்டும் சிறந்த பாதையில் கட்டியெழுப்ப வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டைச் சரிவர நிர்வகிக்கத் தெரியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விடுங்கள் நாம் நாட்டினைக் கட்டியெழுப்புவோம் என தற்போதையஆட்சியாளர்களுக்குச் சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment