ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் நுழைத்தது – பிரான்ஸ் முன்னாள் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு

272 0

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே இன்று குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் பேர ஊழலில் பிரதமர் மோடியின் நண்பருக்கு நேரடியாக 1.30 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பு ஒன்றையும் தனது டுவிட்டர் பதிவில் ராகுல் காந்தி இணைத்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானம் தயாரிக்கும் நிறுவனம் கேட்டு கொண்டதால் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே இன்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.
இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது கருத்து தொடர்பாக பரிசீலித்து வருவதாக ராணுவ அமைச்சகம் இன்றிரவு தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி இன்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயல்பட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு துரோகம் செய்ததுடன், நாட்டுக்காக நமது ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தத்தையும் அவர் அவமதித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment