”முதல்வரும், துணை முதல்வரும் ஆட்சியை நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். கட்சியை நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை. இவர்கள் இருவரும் கட்சியை அழிக்கிறார்கள்” என தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வினர் அமைச்சர் கடம்பூர் ராஜூ அணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன் அணி என இரண்டு அணிகளாகப் போட்டியிட்டனர். சண்முகநாதன் அணியினர் வெற்றிபெற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களை மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் அணியினர் கடத்தத்தியதாக சண்முகநாதன் குற்றம் சாட்டினார்.
ஓ.பி.எஸ் தரப்பில் மனோஜ் பாண்டியனும், பழனிசாமி தரப்பில் தளவாய்சுந்தரமும் ஆலோசகர்களாகச் செயல்பட்டுவருகின்றனர். தளவாய் சுந்தரமும், மனோஜ் பாண்டியனும் கன்னியாகுமரி, நெல்லையில் அ.தி.மு.க-வை அழித்துவிட்டு, தற்போது தூத்துக்குடிக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கட்சியை அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து பலமுறை நான் முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் கட்சி அழிந்துவருகிறது. தொண்டர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை யாரும் அறியவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் கழக அமைப்புச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்ட சின்னத்துரை இந்த மூவரும் கமிஷன் வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் துளியும் இல்லை” என்றார்.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான இவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரு அணிகளாகப் பிரிந்தபோது இவர், ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். தற்போது ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் எதிராகப் பேசியுள்ளார். இது, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

