விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு – தொல்.திருமாவளவன்

341 0

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் மு.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இவ்விழா, தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. ஆகஸ்டு 17-ந் தேதி தமிழகம் தழுவிய அளவில் ‘ஒரு லட்சம் பனை விதைகள்’ ஊன்றுவது என்னும் செயல்திட்டத்தை அறிவித்தோம். அதனை மிகுந்த ஆர்வத்தோடு நமது தோழர்கள் நடைமுறைப் படுத்தி சாதனை படைத்ததற்காக பாராட்டுகிறேன்.

தற்போது நாடு முழுவதும் சனாதன பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது. ஜனநாயகத்துக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்ட பூர்வீகக் குடிகளுக்கும், இதர விளிம்புநிலை மக்களுக்கும் பாதுகாப்பில்லை.

தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி, கவுரிலங்கேஷ் போன்ற கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகளை குறிவைத்து படுகொலை செய்த கொடூரமான போக்கு தலைவிரித்தாடுகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் சங்பரிவார் அமைப்புகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புகளின் அடிப்படை நோக்கம் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரமாக’ பிரகடனம் செய்ய வேண்டும் என்பது தான். இது மிகவும் தீங்கான வலதுசாரி பயங்கரவாத அரசியலாகும். இதில் சனாதன் சன்ஸ்தா எனும் பயங்கரவாத அமைப்பு இந்திய அளவில் 34 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமாரும் ஒருவர் என அவர்களின் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்திலும் அது தலைதூக்கி உள்ளது. அண்மையில் தென்காசி, செங்கோட்டை, வந்தவாசி, வேலூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம்.

தமிழ்நாடு உள்பட இந்திய தேசத்தை சூழ்ந்துள்ள வலதுசாரி பயங்கரவாத தீங்குகளில் இருந்து மக்களை பாதுகாப்பது நமது கடமையாகும். ஆகவே, சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நமது கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி நடத்த உள்ளோம்.

தேர்தலுக்காக அல்லாமல் தேசத்துக்காக மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் மதசார்பற்ற சக்திகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவிஞர்கள் தணிகைச்செல்வன், அப்துல் காதர், கவுதமசன்னா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில துணை பொதுச்செயலாளர் கள் வன்னிஅரசு, எஸ்.எஸ்.பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி திருமாவளவனுக்கு 56 கிராம் தங்கச்சங்கிலியை பரிசளித்தார். கட்சியின் கருத்தியல் பரப்புரை மாநில துணை செயலாளர் டாக்டர் ஞானசேகரன் தங்கப்பேனா பரிசளித்தார்.

Leave a comment