அசாமில் போடோ கிளர்சியாளர்கள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

272 0

பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போடோ கிளர்சியாளர்கள் 2 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில் உள்ள போடோ இன மக்கள், போடோலாந்து எனும் தனி நாடு கோரிக்கையை  வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் இதே கோரிக்கைக்காக கடந்த 1986-ம் ஆண்டு போடோ தேசிய ஜனநாயக முன்னனி எனும் போராளி குழு உருவாக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் மத்திய அரசு போடோ தேசிய ஜனநாயக முன்னனியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் அவர்களுடன் சண்டையில் ஈடுபட்டு வருகினறனர்.

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேகியாஜூலி மாவட்டத்தில் சந்திப்பூர் எனும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீது போடோ கிளர்சியாளர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் நால்வரில் 2 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அசாம் மாநிலத்தில் தூக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment