பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை

19 0

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்த நாட்டின் உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் 8 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், கடந்த மாதம் 18-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த மாதம் 30-ந் தேதி அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு மூத்த மந்திரிகளுடன் சென்றார். அங்கு அவர் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை சந்தித்துப் பேசினார். உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை தாண்டிய பிரச்சினைகள், ராணுவ நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ பாகிஸ்தானிலும், பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரதமரும், ராணுவ தளபதியும் இணைந்து பணியாற்றுவது என உறுதி எடுத்துக்கொண்டனர்” என கூறப்பட்டது.

இந்த நிலையில், இம்ரான்கான் நேற்று முன்தினம் அந்த நாட்டின் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவும், ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரும் வரவேற்றனர்.

இம்ரான்கானுடன் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, ராணுவ மந்திரி பர்வேஸ் கட்டாக், தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி, உள்துறை ராஜாங்க மந்திரி ஷெர்யார் அப்ரிடி ஆகியோரும் சென்றிருந்தனர்.

அங்கு இம்ரான்கான் 8 மணி நேரம் இருந்து, ராணுவ தளபதியுடனும், உளவுத்துறை தலைமை இயக்குனருடனும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், உளவுத்தகவல்கள் பரிமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அப்போது உளவுத்துறையின் செயல்பாடுகளை இம்ரான்கான் மனம் திறந்து பாராட்டினார். குறிப்பாக தேசப்பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவற்றில் உளவுத்துறையின் செயல்பாடுகள் மெச்சத்தகுந்தவை என அவர் கூறினார்.

இம்ரான்கான் தொடர்ந்து கூறும்போது, “பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும், பாதுகாப்பு படைகள் மற்றும் ராணுவ உளவு அமைப்புகளின் பின்னால் உறுதிபட நிற்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இம்ரான்கான், உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தியது தொடர்பாக தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “பிரதமருக்கும், அவருடன் சென்றிருந்த மூத்த மந்திரிகளுக்கும் ராணுவ தளபதியும், உளவுத்துறை தலைமை இயக்குனரும் 8 மணி நேரம் முக்கிய தகவல்கள் அளித்தனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சவால்கள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது” என கூறப்பட்டு உள்ளது. இம்ரான்கான் அடுத்தடுத்து ராணுவ தலைமையகத்துக்கும், உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் சென்று ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண கல்லூரிக்கு டீனான இந்தியர்

Posted by - April 23, 2017 0
அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிக்கு டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3 ஆயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்கிறது: நேட்டன்யாஹூ

Posted by - December 12, 2017 0
மூன்றாயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்ந்து வருகிறது என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வடகொரிய தலைவரை சந்திக்கிறார்

Posted by - October 3, 2018 0
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளையும்…

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2016 0
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.