பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

217 0

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். கடைசி நேர கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது ரெயில் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டி திட்டமிட்டு செல்லும் வகையில் 120 நாட்களுக்கு முன்கூட்டியே, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 15) வருவதால், 3 நாட்களுக்கு முன்கூட்டி, அதாவது ஜனவரி 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று(வியாழக்கிழமை) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களான நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு நீண்டது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 13-ந் தேதிக்கு முன்பதிவு இன்று(வெள்ளிக் கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.

Leave a comment