உலக சந்தையில் தேயிலை விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஆயிரம் ரூபாவாக ஆக்கப்படவேண்டும். திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கடந்த வருடம் தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து சம்பள அதிகரிப்பு செய்ய மறுத்ததுபோன்று இம்முறை அவ்வாறு செய்ய தொழிற்சங்கங்கள் இடமளிக்கக்கூடாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தற்போது கம்பனி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு பூரண வருமானமாக ஆயிரம் ரூபா கிடைக்கும்வகையில் ஒப்பந்தம் செய்யப்படவேண்டும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வருடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருந்தபோதும் தேயிலையின் விலை வீழ்ச்சியுற்றிருப்பதால் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள முடியாது என கம்பனிக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இம்முறை பேச்சுவார்த்தையின் போதும் தொழிற்சங்கங்கள் 700 ரூபாவக இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்திருக்கின்றனர்.
என்றாலும் அந்தளவு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள முடியாது என்றே முதலாளிமார் தற்போதும் தெரிவித்து வருகின்றனர். மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் கடந்த வருடம்போன்று தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ள வாதத்தை அவர்களால் இம்முறை முன்வைக்க முடியாது. ஏனெனில் இந்த காலப்பகுதியில் தேயிலையின் விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரச தேயிலை சபை அறிவித்துள்ளது.

