நீதிமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்திய முதியவர் கைது

218 0

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (03) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிரதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சப்தமிட்டுக் கொண்டிந்தார்

குறித்த முதியவர் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இலஞ்சம் பெறுவதாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

போராட்டம் நடத்திய அந்த முதியவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதித்ததுடன் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையுறு வழங்கியமை என்ற குற்றச் சாட்டிலையே குறித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதியவரை இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இலஞ்சம் பெறுவதாகவும் முதியவரால் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ அவர்களினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை எவ்வித விசாரணைகளும் இன்றி இன்று (04) காலை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

Leave a comment