‘ஒன்றிணைந்த எதிரணிக்கு பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை’!

188 0

ஒன்றி​ணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால்,  அதிக பட்ச சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸ் மா அதிபர் பூஜித்ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனவே மக்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு, ஏற்பாட்டாளர்களிடம் பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள 5ஆம் திகதி கொழும்பு நகரின் பாதுகாப்புக்காக, விசேட பொலிஸ் படையணி இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் பொலிஸார் அழைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றம் உள்ளிட்ட நகரின் முக்கிய பல இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன், புலனாய்வு பிரிவு, கலகம் அடக்கும் பொலிஸார், போக்குவரத்து பொலிஸாரும் அன்றைய தினம் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதி பொலிஸ் மா அதிபரை அழைத்து தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a comment