ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பரப்பிய இரண்டாயிரம் வருடப் பெருமிதம்!

1158 323

நாலாவது வருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில் தமிழர்கள் பெருந்தொகையாக வசிக்கும் நகரங்கள் ஸ்காபரோவும் மார்க்கமும் ஆகும். மார்க்கம் நகரில்தான் சென்ற வருடம், ஈழத்தமிழர்களின் விடுதலை களமாக விளங்கிய வன்னி பிரதேசத்தை நினைவூட்டும் விதமாக `வன்னி வீதி’ திறக்கப்பட்டது. ஸ்காபரோ நகரத்தின் பிரதிநிதியாகிய கரி ஆனந்தசங்கரிதான் கனடாவில் தை மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாக நாடாளுமன்ற மசோதா மூலம் ஏகமனதாக நிறைவேற்றக் காரணமானவர். ஸ்காபரோ நகரமும் மார்க்கம் நகரமும் சந்திக்கும் வீதியின் போக்குவரத்தை நிறுத்தி, தமிழர் தெரு விழா இரண்டு நாள்கள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம். இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே நடத்தப்படும் தெருவிழாக்களுள் பிரமாண்டமானதும் பிரமிப்பானதுமான சாதனை விழா, இந்தத் தமிழர் விழாதான்.

தமிழர் விழா

கடந்த வருடம் விழாவைத் தொடங்கி வைத்தது, தமிழர்களுக்கு மிகவும் அணுக்கமான, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள். இவர் விழாவைத் தொடங்கி வைத்ததும் அல்லாமல் சிலம்பாட்டத்தில் பங்குபற்றி சிலம்பாடியதை உலகத் தொலைக்காட்சிகள் பலவும் காட்டின. இம்முறை மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்கள், கவர்னர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்காற்றினர். இலக்கியவாதிகள், நாடகக்காரர்கள், இசை மற்றும் நடனத் துறை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர். பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து எனச் சகல கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் நாள், மெகா ட்யூனர்ஸ் குழுவுடன் திரைப்படப் பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் இசை விருந்தும், அடுத்த நாள் அக்னி இசைக் குழுவினரின் நிகழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. உணவுச் சாவடிகளுக்கும் சிறுவர்களுக்கான களியாட்டங்களுக்கும் குறைவில்லை. பிற நாட்டினர் கரும்பையும், பலாப்பழத்தையும், இளநீரையும், நுங்கையும் சுவைத்தது, பார்த்துக்கொண்டிருந்த நம் தமிழர்களுக்குக் கண்கொள்ளா விருந்து.

Leave a comment