உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவோம் – டிரம்ப் மிரட்டல்

200 0

உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் வெளியேறுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

உலக நாடுகள் இடையேயான வர்த்தக சட்டதிட்டங்களை வகுக்கவும், பல்வேறு நாடுகள் இடையே ஏற்படுகிற வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும் டபிள்யு.டி.ஓ. என்னும் உலக வர்த்தக அமைப்பு. 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில் அவர் ‘புளூம்பெர்க் நியூஸ்’ ஊடகத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், “உலக வர்த்தக அமைப்பு, அடிக்கடி அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி விடும்” என்று கூறினார்.

ஏற்கனவே டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, அனைவருக்கும் பலன் அளிக்கத்தக்கதாக உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும், நாம் அங்கு அனைத்து வழக்கிலும் தோல்வியையே சந்தித்து வருகிறோம்” என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசரும் அமெரிக்காவின் இறையாண்மையில் உலக வர்த்தக அமைப்பு தலையிடுகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment