அடுத்த வார இறுதிக்குள் மயிலிட்டி பாடசாலை மக்கள் வசம் – வேதநாயகன்

277 0

மயிலிட்டிப் பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் எம்மிடம் கையளிப்பதாக இராணுவத் தளபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மயிலிட்டிக்கு கடந்த 23 ஆம் திகதி வருகை தந்த ஜனாதிபதி மயிலிட்டிப் பிரதேசத்தின் மீள் குடியேற்றத்திற்கு அப் பகுதிப் பாடசாலை விடுவிப்பு இன்றியமையாதது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராய தெரிவித்து வந்த நிலையில் குறித்த பாடசாலையினை விரைவில் விடுவிக்குமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டிருந்தார். குறித்த உத்தரவின் பிரகாரம் பாடசாலை விடுவிப்புத் தொடர்பில் கேட்டபோதே மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

குறித்த பாடசாலை விடுவிப்புத் தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முந்தினம் 27 ஆம் திகதி மாலை இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திச் செயலணியில் நாம் பங்குகொண்டிருந்த சமயம் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்காவும் கலந்துபொண்டிருந்தார். இதன் நிறைவில் இராணுவத் தளபதியுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. இதன்போது குறித்த பாடசாலை விடுவிப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பினேன்.

குறித்த பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில் கண்டிப்பாக அப் பாடசாலையை விடுவிக்க வேண்டும் என்ற கட்டளை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரத்தின் இறுதிப் பகுதியில் உத்தியோகப்பூர்வமாக எம்மிடம் பாடசாலை ஒப்படைக்கப்படும். என இராணுவத் தளபதி பதிலளித்தார். என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

Leave a comment