மியான்மர் ராணுவ தளபதி பேஸ்புக் கணக்கு முடக்கம்

224 0

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. 

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசார் மீது ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு உள்ள அந்த இனத்தினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 7 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காள தேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

இந்த கலவரத்தை தடுக்க தவறியதாக அந்த நாட்டின் தலைவர் சூ கி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தளபதி, தனிநபர்கள், அமைப்புகள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தனர். ரோஹிங்யா இனத்தையே அழிக்கும் வேலையில் ராணுவம் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது. இதற்கு ‘பேஸ்புக்’ ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. இதேபோன்று 19 தனிநபர்கள், அமைப்புகளின் கணக்குகளும் முடக்கப்பட்டன.

Leave a comment