எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

249 0

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கூறப்பட்டுள்ள புகாரில் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளார். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

பொது ஊழியரான எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்காக ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாரர் கொடுத்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட விசாரணையை ஜூன் 22-ந் தேதியே தொடங்கி விட்டனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை முடிக்க 3 மாதம் காலஅவகாசம் அளிக்க வேண்டும். உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெற்று வரும் இந்த திட்டப்பணிகளை உலக வங்கியும் கண்காணித்து வருகிறது. இதில் தவறு நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது’ என்றார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘ஜூன் 22-ந் தேதியே முதற்கட்ட விசாரணை தொடங்கி விட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஒரு புகார் மீது 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடித்து ஆகஸ்டு 22-ந் தேதியே அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘புகார் கொடுத்து 2 மாதம் முடிவடைந்து விட்ட நிலையில் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை’ என அட்வகேட் ஜெனரலை பார்த்து கேள்வி எழுப்பினார்.

பின்னர் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Leave a comment