அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

216 0

அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சர், முதல்- அமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் ஆமை வேகத்தில் கூட நகர முடியாமல் தேங்கிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மீது வருமான வரித்துறை அளித்த குட்கா டைரி தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதால் இறுதியில் அந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி, அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிலும், அவரது அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை பற்றிய அறிக்கை தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அதுவும் தற்போது லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் முடங்கிக்கிடக்கிறது.

தி.மு.க. சார்பில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கொடுக்கப்பட்ட, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைதி காத்தது.

பிறகு தி.மு.க. சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அந்த விசாரணையை மேற்கொள்ள, செப்டம்பரில் ஓய்வுபெற இருக்கும் திருநாவுக்கரசு என்ற கூடுதல் டி.எஸ்.பி.யை போலீஸ் அகாடமியிலிருந்து அவசர அவசரமாக லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு மாற்றி, அவர் மூலம் அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெறுகின்றன என்று செய்திகள் வருகின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள் குறித்து விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சார்பில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இணை இயக்குனரான ஐ.ஜி. மீது, இப்போது ஒரு பெண் எஸ்.பி.யே பாலியல் புகார் அளித்து, அந்த புகாரை, விசாகா கமிட்டி அடிப்படையில் தற்போது அவசரம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. தலைமையிலான துறை சார்ந்த விசாரணை கமிட்டி விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பாகவே, பாலியல் தொல்லைக்கு உள்ளான எஸ்.பி. லஞ்ச ஊழல் தடுப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஆனால், புகாருக்கு ஆளாகியிருக்கும் அதே துறையின் இணை இயக்குனர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யின் கீழ்தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் முதல் முதல்-அமைச்சர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில் இருப்பதை இந்த நேரத்தில் மறந்து விட முடியாது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். ஆனால் இப்படியொரு கடுமையான குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு அதிகாரியை வைத்து லஞ்சப்புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? எப்படி ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டு, அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான ஊழல் வழக்கினை ஓய்வுபெறப்போகும் அதிகாரியை வைத்து விசாரிப்பதற்கு பதிலாக, லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியையே விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கவும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனர், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர், தலைமைச்செயலாளர் ஆகியோர் நேர்மை, நியாயம், நீதியைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐ.ஜி.யை இணை இயக்குனராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும், முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment