கோவை பாரதி பூங்காவில் மின்னணு கழிவுகளை கொட்ட நவீன குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க ஏராளமான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் சேகரமாகும் குப்பைகள் தினமும் அகற்றப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகளை கொட்ட தனித்தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டாலும், பொதுமக்கள் அனைத்து குப்பைகளையும் சேர்த்து ஒரே தொட்டியில்தான் கொட்டி வருகிறார்கள். சில குப்பை தொட்டிகளில் கண்ணாடி பாட்டில்கள், பழுதான மின்சாதன பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கொட்டப்படுகிறது.
இதன் காரணமாக மாநகர பகுதியில் குப்பை மேலாண்மை அதிகாரிகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது. இதற்கிடையே, மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக தனி குப்பை தொட்டி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சோதனை அடிப்படையில் 22-வது வார்டுக்குட்பட்ட பாரதி பூங்காவில் நவீன குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
மின்னணு கழிவுகளை சேகரிக்கும் குப்பை தொட்டி முறை வெற்றியடைந்தால், ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் மாநகர பகுதி முழுவதும் இத்தகைய குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:-
தனியார் நிறுவனத்துடன் இணைந்து நவீன குப்பை தொட்டியை வைத்து உள்ளோம். பல்பு, ஒயர்கள், மற்றும் மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை இந்த குப்பை தொட்டியில் போடலாம். அவற்றை தனியார் நிறுவன ஊழியர்கள் எடுத்து செல்வார்கள். அதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அவர்கள் மறுசுழற்சி செய்வார்கள். பல்பு உள்பட மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை அழித்து விடுவார்கள்.
தற்போது பாரதி பூங்காவில் மட்டும் நவீன குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் படிப்படியாக மாநகர பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அதன் பிறகு தற்போது குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் மின்னணு கழிவுகளுக்காக நவீன குப்பை தொட்டிகள் வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

