வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு பெறலாம் – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணம் சொல்கிறது

197 0

இயற்கை பேரிடரின்போது நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணம் தெரிவித்துள்ளது. 

மழையால் பெருத்த சேதத்துக்கு ஆளான கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகள் நிதி உதவி செய்ய முன் வந்து உள்ளன. ஆனால் அவற்றை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் என்ற ஆவணம், “இயற்கை பேரிடரின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளலாம்” என கூறுகிறது.

அதே நேரத்தில் ஐ.நா. சபையின் துணை அமைப்புகள் ஏதேனும் உதவிகள் செய்ய முன்வந்தால், அதை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவசியம் என்னும் நிலையில் மட்டுமே மத்திய அரசு ஏற்கும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஐ.நா. நிதி அமைப்புகள் அன்னியச்செலாவணியுடன் தொடர்புடைய நிதி உதவி அளிக்க முன்வந்தால், அதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்தால் மட்டுமே பெற முடியும் என அந்த ஆவணம் சுட்டிக்காட்டு கிறது.

ஆனால் இயற்கை பேரிடரின்போது வெளிநாடுகளிடம் நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுப்பது இல்லை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

Leave a comment