தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

236 0

வவுனியா – ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம் மலையினை தொல்பொருள் திணைக்களத்திலிருந்து மீண்டுத்தருமாறு கோரியும் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது

குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினருடன் கிராமமக்கள் , பொது அமைப்புக்கள் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா , வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராஜா , ஐீ.ரீ.லிங்கநாதன் , பத்மநாதன் சத்தியலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் , வினோதரலிங்கம் , முன்னாள் வடமாகான சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பல கட்சிகளின் பிரதிநிதிகள் , அகில இலங்கை சைவ மகா சபையினர் என பலரும் கலந்து கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமது மலை , இந்துக்களை அவமதிக்காதே , வழிபாட்டுச் சுதந்திரத்தில் வாலாட்டாதே , இந்துக்கள் வழிபாட்டில் இடையூறு செய்யாதே , ஆதி லிங்கேஸ்வரர் ஆக்கிரமிப்பு இந்துக்கள் அவமதிப்பு , தொல்பொருள் திணைக்களமே மலையை தோண்டி எடுக்கவா? , தெற்கின் சுதந்திரம் வடக்கில் இல்லை , வடக்கு என்றைக்குமே மாற்றான் வீட்டுப்பிள்ளை , மன்டியிடாது வடக்கின் மானம் , சைவநீதிக்கு சாவுமணி , இலங்கை அரசே எங்கே நீதி போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியுள்ளார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐனாதிபதிக்கு அனுப்புவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனிம் ஒப்படைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Leave a comment