2020 க்கு பின் நல்லாட்சிக்கு ஒப்பந்தம் தேவையில்லை- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

238 0

தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஆட்சியை முன்னெடுப்பது தொடர்பில் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமற்றதாகும். ஒப்பந்தங்கள் இன்றி 2020 க்கு பின்னரும் இதே புரிந்துணர்வுடன் ஆட்சியை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் றோஹண லகஷ்மன் பியதாச தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் இரண்டு ஆண்டுகள் தேசிய அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய என்பன புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் காரணமாக எழுத்து மூல உடன்படிக்கை ஒன்றுக்கான அவசியம் ஏற்படவில்லை.

மேலும் 2020 வரை மாத்திரமல்லாமல் அதற்கு பின்னரும் இதனை தொடர்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு அதனை விமர்சிப்பவர்களே அரசாங்கத்திற்குள் பிளவுகள் காணப்படுவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.

எவ்வாறிருப்பினும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க நினைபவர்களின் எண்ணம் நிறைவேறாது. நாம் நாட்டில் தொடர்ச்சியாக அபிவிருத்திகளை மேற்கொண்டு வெற்றிப் பாதையில் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.

Leave a comment