சிதம்பரம் அருகே தீவு போல் காட்சியளிக்கும் 20 கிராமங்கள்: முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கவைப்பு

290 0

சிதம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 20 கிராமங்கள் தீவுப்போல காட்சியளிக்கிறது. அங்குள்ள முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வல்லம்படுகை அருகே ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கொள்ளிடக்கரையை சுற்றியுள்ள கிராமங்கள், விளைநிலங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. பழைய கொள்ளிடம்  ஆற்றின் அருகே உள்ள வேளக்குடி, பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கீழக்குண்டலப்பாடி கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழைய கொள்ளிடம் ஆற்றில் அகரநல்லூர் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. வீரன்கோவில்திட்டு, சின்னகாரமேடு, பெரிகாரமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடல்நீர்  உட்புகுந்ததாலும், கொள்ளிடம் நீர் சூழ்ந்ததாலும் இந்த கிராமங்கள் தீவு போல் காட்சியளிக்கின்றன. சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 20 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று முகாம்களிலும் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், வெள்ளம் பாதித்த வேளக்குடி, பெராம்பட்டு, பழையநல்லூர், அகரநல்லூர், வையூர் ஆகிய பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, `பழைய கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அதிகளவில் முதலைகள் அடித்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரையோரம் சுற்றித்திரியும் முதலைகளை பிடிக்க  வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்’ என்று தெரிவித்தார். பாமக இளைஞரணி தலைவர் அண்புமணி நேற்று மதியம் வீரன்கோவில்திட்டு, சின்னகாரமேடு, பெராம்பட்டு, வேளக்குடி பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பவானியில் நீர்திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் கடந்த 14ம் தேதி 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அன்றிரவு முதல் உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.  அதிகபட்சமாக 75 ஆயிரம் கன அடி வரை வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் நீர்வரத்து குறைய தொடங்கியதால், உபரிநீர் திறப்பு அன்றிரவு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4  மணிக்கு உபரிநீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. ஆனால், காலை 10 மணிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு பின்னர் 5  ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

Leave a comment