அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்

205 0

அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது என தனது நினைவுகளை பி.டி. உஷா பகிர்ந்து உள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 1984ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன.  இந்த போட்டியில் இந்தியா சார்பில் தடகள வீராங்கனை பி.டி. உஷா கலந்து கொண்டார்.  அவர் வீரர், வீராங்கனைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி உள்ளார்.

அங்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.  இந்த நிலையில், தனக்கு ஊட்ட சத்து நிறைந்த உணவு அங்கு வழங்கப்படவில்லை என 34 வருடங்களுக்கு பின் அவர் கூறியுள்ளார்.  இதனால் தனக்கு பதக்க வாய்ப்பு நழுவியது என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதி பகுதியில் நானும், ரொமேனியா நாட்டின் வீராங்கனை கிறிஸ்டியானா கொஜோகாருவும் எல்லை கோட்டை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கடந்தோம்.  ஆனால், சரியான மதிய உணவை சாப்பிட்ட கிறிஸ்டியானாவுக்கு பதக்கம் கிடைத்தது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, இந்திய தடகள வீரர், வீராங்கனைகளுக்கு அந்த நாட்களில் குறைவான வசதிகளே வழங்கப்பட்டன. மற்ற நாட்டு வீரர்கள் நவீன கருவிகளுடனான வசதிகளை கொண்டிருந்தனர்.  அவர்களை கண்ட எங்களுக்கு பொறாமையாக இருந்தது.  இதுபோன்ற வசதிகள் ஒரு நாள் எங்களுக்கும் கிடைக்க பெறுவது ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்றே நினைத்தோம்.

நான் போட்டி நடக்கும் கிராமத்தில் தங்கி இருந்தபொழுது, அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

அதனை நான் நினைவு கொள்கிறேன்.  கேரளாவில் நாங்கள் அதனை கடுமாங்கா அச்சார் என கூறுவோம். அதனுடன் நறுக்கப்பட்ட பழங்கள் தரப்பட்டன.  எனக்கு வேக வைத்த உருளை கிழங்குகளோ அல்லது சோயா சாஸுடன் கலந்த அரை வேக்காட்டில் உள்ள சிக்கனோ அல்லது பிற சத்து நிறைந்த அமெரிக்க உணவோ வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்சில் அமெரிக்க உணவே கிடைக்கும் என்றும் ஒருவரும் எங்களிடம் கூறவில்லை.  ஆனால் ஊட்டச்சத்து எதுவும் இல்லாத அரிசி கஞ்சியே சாப்பிட வேண்டியிருந்தது.  இது போட்டியின் கடைசி 35 மீட்டரில் நிச்சயம் எனது செயல் திறனில் பாதிப்பினை ஏற்படுத்தியது.  தேவையான ஆற்றல் அளவை என்னால் பெற முடியாமல் போனது என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்த போட்டியில் நூறில் ஒரு பங்கு வினாடியில் வெண்கல பதக்கத்தினை மற்றொரு வீராங்கனையான கிறிஸ்டியானா தட்டி சென்றுள்ளார்.

இந்தியாவுக்காக 18 வருடங்கள் தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல பதக்கங்களை குவித்துள்ள உஷா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.  ஒரு தடகள வீராங்கனையாக தனக்கு மறுக்கப்பட்ட விசயங்களை பயிற்சி பெறுபவர்களுக்கு இந்த பள்ளி வழங்கி வருகிறது என உஷா கூறுகிறார்.

Leave a comment