எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஒன்றை சொல்கிறேன்.
மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நான் (தம்பித்துரை) ஆகிய 3 பேரும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதை இல்லையென யாராவது சொல்ல முடியுமா? தமிழக அரசின் சார்பில் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ? அது எல்லாம் கருணாநிதிக்கு செய்யப்பட்டது.

அண்ணா, எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்ட சிக்கல்கள் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்தார்கள். அதற்கு மேல் தமிழக அரசும் ஆட்சேபனை செய்யவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்.
கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை கட்சியில் இருந்து தி.மு.க.வினர் நீக்கியதால் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

