போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் அமெரிக்க விமானப்படை குண்டுமழை

349 0

201609181011290189_us-led-forces-strike-syrian-troops-prompting-emergency-un_secvpfசிரியாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவத்தை சேர்ந்த சுமார் 80 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க சிரியா மற்றும் ரஷியாவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி குழுக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட சுமார் 3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் உள்ள நிலையில் அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் கையொப்பமிட்டன. இதன் எதிரொலியாக கடந்த 12-ம் தேதி மாலையில் இருந்து அங்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், ஈராக் நாட்டு எல்லை வழியாக இன்று சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்காவின் F-16 மற்றும் A-10 ரகப் போர் விமானங்கள் டெய்ர் அல் ஸோர் நகரில் உள்ள சிரியா ராணுவப்படை முகாம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் சிரியாவை சேர்ந்த சுமார் 80 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் நிலைகுலைந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, அருகாமையில் உள்ள சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதாகவும், பின்னர் ராணுவப் படையினர் அந்த இடங்களை மீட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிரியா ராணுவப் படையினர் தங்கியுள்ள முகாம்களின்மீது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறீய வகையில் அமெரிக்க விமானப்படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துணைபோகும் அமெரிக்காவின் மனப்போக்கை காட்டுவதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம் என்று நினைத்து ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத சிரியாவும், ரஷியாவும் இதுதொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

அதன்படி, (அமெரிக்க நேரப்படி) இன்றிரவு 7.30 மணியளவில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றுகூடி, சிரியாவில் நீடித்துவரும் சிக்கல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.