தி.மு.க.வில் பிளவு இல்லை என்றும் தொண் டர்களை ஸ்டாலின் சரியாக வழிநடத்துகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தி.மு.க.வில் கருணாநிதியின் மறைவையொட்டி திண்டுக்கல்லில் அனைத்து கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி நிரூபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழகம் மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தலைவராக விளங்கினார். அவரது எளிமை, முற்போக்கு சிந்தனை ஆகியவை அனைவரையும் கவர்ந்தது. அவரது வழியில் தி.மு.க. தொண்டர்கள் பயணம் செய்ய வேண்டும். தி.மு.க. என்பது எஃகு கோட்டை. இதில் எந்த பிளவும் இல்லை. யாராலும் உடைக்க முடியாது.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பினர். ஆனால் அரசு தயக்கம் காட்டியது வேதனை அளிப்பதாக உள்ளது. தி.மு.க.வை 50 ஆண்டுகாலம் கட்டி காத்த கருணாநிதி வழிகாட்டுதலின்படி செயல் தலைவர் ஸ்டாலின் கட்டுக்கோப்பாக தி.மு.க.வை வழிநடத்துவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

