“பால் ஊற்றியது மத சடங்கில்லை… தமிழ் மரபு!” கருணாநிதி சமாதிக்குப் பால் ஊற்றியது குறித்து மதன் கார்க்கி

257 0

“என் சின்ன வயசுல இருந்தே கலைஞர் ஐயாவை தெரியும். என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்களில் அவர் என் கூட இருந்திருக்கிறார். அவரை நினைக்கும்போதே கண்ணீர் வருகிறது” எதிர்முனையில் அவர் அழுகிறார் என்பது புரிந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

”அப்பாவுக்கும் கலைஞர் ஐயாவுக்குமான உறவு அரசியல் சார்ந்ததுனு நிறையபேர் நினைச்சிட்டு இருக்காங்க. அது தவறு. ரெண்டு பேருக்கும் இடையிலே இருக்கிறது இலக்கியம் சார்ந்த உறவு. காலையில் எழுந்ததும் அப்பா ‘முரசொலி’யைப் படிச்சுட்டு, அதில் இருக்கக்கூடிய கவிதைகள், கட்டுரைகள் பற்றி கலைஞர் ஐயாவுக்குப் போன் பண்ணி பேசுவார். அந்த உரையாடல் நீண்ட நேரம் தொடரும்.

மதன் கார்க்கி

கலைஞர் ஐயாவும் அப்பாவுடைய நூல்களைப் படிச்சிட்டு அவருடைய கருத்துகளை சொல்லுவார். பலநாள் அப்பாவோட சிரிப்பொலி கேட்டு அதிகாலை நேரங்களில் எழுந்திருக்கேன். கலைஞர் ஐயாவும் அப்பாவும் சிரிச்சிட்டே பேசுற அதிரொலி வீடு முழுக்க எதிரொலிக்கும். ஆமாம், அந்த அதிகாலை நேரத்திலேயே எங்கள் வீடு முழுக்க கலைஞர் வாசம்தான் வீசும்.

அப்பா எந்தச் சூழ்நிலையிலும் கலைஞர் ஐயாவிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. ஆனா, முதல்முறையா எனக்காக ஓர் உதவி கேட்டார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புல எனக்கு ஆர்வம் இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துல படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்கிட்ட குறைவான மதிப்பெண்தான் இருந்தது. அதனால எனக்கு சீட் கிடைப்பது கஷ்டமான காரியமா இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அப்பா, கலைஞர் ஐயாகிட்ட உதவி கேட்டார். உடனே, ‘தமிழ் அறிஞர்’ கோட்டா மூலமா சி.எம் செல்லுல இருந்து பேசி எனக்கு சீட் கிடைத்தது.

சிலர் மட்டும்தான் அந்தக் கோட்டா வழியே படிக்க வருவாங்க. அதில் நானும் ஒருவன். அதற்கு முழு காரணம் கலைஞர் ஐயாதான். அதுக்காக அவருக்கு நான் பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஏன்னா, எனக்கான கல்வி ஆரம்பிச்சதே அண்ணா பல்கலைக்கழகத்துலதான். ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் படிப்பு மேலே பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனா, அண்ணா பல்கலைக்கழத்துல இருந்த பேராசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்துலதான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையே அங்கிருந்துதான் தொடங்கிச்சு.

கருணாநிதி

கலைஞர் ஐயா டைடல் பார்க் திறந்துபோது, நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சொசைட்டி செகரட்டரி. அந்தச் சொசைட்டியில் இருந்த மாணவர்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து கலைஞர் ஐயாவுக்கு நன்றி சொல்றதுக்காக அவரை நேரில் சந்தித்து கவிதை ஒண்ணு படிச்சு காட்டினோம். உங்களுடைய இந்தத் திட்டம் எதிர்காலத்தையே மாற்றப்போகுதுங்கிற நோக்கில் எழுதிய கவிதை அது.

”இந்த மாதிரி பூங்கா கட்டிய உங்களுடைய கைகளுக்கு, எங்களால் பூக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால், எதிர்காலத்தில் நாங்கள் எங்கே இருந்தாலும் எங்களுடைய அறிவும் ஆற்றலும் இந்த மண்ணுக்குதான் பயன்படும். நாங்கள் இங்கே வந்துதான் உழைப்போம்”னு அவர் முன்னால் உறுதி எடுத்துக்கிட்டோம். இப்ப என் நண்பர்கள் பலரும் அவர் கட்டித்தந்த டைடல் பார்க்கில்தான் வேலை பார்த்துட்டு இருக்காங்க. பலருக்கும் அவர் வாழ்க்கை கொடுத்திருக்கார்.

என் மனைவி நந்தினியை அண்ணா பல்கலைக்கழகத்தில்தான்  சந்திச்சேன். எங்களுக்கிடையேயான காதல் அங்குதான் தொடங்குச்சு.  எங்கக் காதலை வீட்டில் சொன்னப்ப அப்பா தயங்கினார். யோசிச்சார். அந்தச் சமயத்துல அப்பாவின் நண்பர்கள் யார்கிட்டயாவது இந்த விஷயத்தைச் சொல்லலாம்னு தோணுச்சு. அப்பாவுக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. அதனால கலைஞர் ஐயாகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேசச் சொல்லலாம்னு முடிவு பண்ணினேன். தயாளு அம்மா மூலமா கலைஞர் ஐயாவை பார்த்து என் காதல் பற்றிச் சொன்னேன்.

”நீ, கவலைப்படாத தம்பி. கோபாலபுரத்தில் நிறைய பேர் காதல் திருமணம் புரிந்தவர்கள்தான். அப்பாகிட்ட நான் பேசுறேன்”னு சொன்னார். சொன்ன மாதிரியே அப்பாகிட்ட வந்து பேசுனார். அவர் வீட்டுக்குள்ள போய் அப்பாகிட்ட பேசிட்டு திரும்பிவரும்போது வீட்டு வாசலில் நானும் நந்தினியும் நின்னுட்டு இருந்தோம். எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு, ‘நான், சொன்ன மாதிரியே சம்மதம் வாங்கிக் கொடுத்துட்டேன். என்னோட தலைமையிலதான் உங்க கல்யாணம் நடக்கும்”னு சொல்லிட்டுப்போனார்.

அவர் சொன்ன மாதிரியே அவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். என் பையன் பிறந்தவுடனேயே அவரிடம் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன். நேரடியா, கலைஞர் ஐயா எங்க வாழ்க்கையில் நடத்திய விஷயங்கள் இதெல்லாம். இதுதவிர, அவருடைய திரைப்பட வசனங்கள் மூலமா, அரசியல் திட்டங்கள் மூலமா நிறைய கற்றிருக்கேன். ‘பாகுபலி’ படத்துக்கு வசனம் எழுதும் போது அவருடைய திரைப்படங்கள் பார்த்து வசனங்கள் பற்றி தெரிஞ்சிகிட்டேன்.

மதன் கார்க்கி

கலைஞர் ஐயாவுடைய உடல்நிலை சரியில்லனு கேள்விப்பட்டவுடனே அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். அவருடைய இறப்புக்கு இரண்டு நாளுக்கு முன்னால் அப்பா உடைந்துபோய் உட்கார்ந்திருந்தார். கலைஞர் ஐயாவுடைய இறப்பு அப்பாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அப்பாவுடைய வாழ்க்கையில் கலைஞர் எவ்வளவு முக்கியமான மனிதர் என்கிற விஷயம் எனக்கு நல்லா தெரியும். ரொம்ப நாளாவே கலைஞர் ஐயாவுடைய குரல் கேட்க முடியலைனு அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். இந்தளவுக்கு அப்பா எமோஷனல் ஆகி நான் பார்த்ததே இல்லை. அப்பாவை தேற்றவே முடியலை. ஐயாவின் இறுதிசடங்கு வரைக்கும் உடன் இருந்தார்.

குடும்பத்தில் இருந்த எல்லாரிடமும் கலைஞர் பற்றிய நிறைய விஷயங்களை சொல்லிட்டு இருந்தார். கலைஞர் ஐயாவுடைய இறப்பிலிருந்து அப்பா இன்னும் மீளவே இல்லை. எங்க அப்பா உட்பட எங்க குடும்பத்தில் இருக்கின்ற எல்லாரையும் கலைஞர் ஐயா, தம்பினுதான் அழைப்பார். இனி அந்தக் குரலை எப்போது கேட்கப்போறோம். கலைஞர் ஐயாவுடைய சமாதியில் அப்பாவோட சென்று பூக்கள் போட்டு, பால் ஊற்றிட்டு வந்தோம்.

‘பால் ஊற்றினது கலைஞர் பின்பற்றும் பகுத்தறிவுக்கு எதிரானது. இந்துமுறை சடங்கு. அதை அப்பா பண்ணினது ஏன்’னு சிலர் கேட்கறாங்க. ஆனா, அது உண்மையில்ல. ‘நீத்தார்க்கு பால் வார்த்தல்’னு நம்ம தமிழ் மரபில் இருக்கு. இறந்தவர் இடத்தை ஈரமா வைக்கிறது தமிழ் மரபு. இது இந்து மத சடங்கு கிடையாது. மலர்களை வைத்து எப்படி அஞ்சலி செலுத்துறோமோ அதேமாதிரி பால் தெளித்து வணங்குவதும் மரபு சார்ந்த விஷயம்தான். இதுபற்றி தொல்காப்பியத்திலும் இருக்கு. என் தாத்தா இறந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த யாரும் கடவுள் வழிபாடு, இந்துமுறை சடங்குகள் எதுவும் செய்யவில்லை. பால் தெளித்தோம். அது, நம்ம மனசை அமைதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு மரபு. அப்பாவுடைய கிராமத்தில் அதை இன்னும் கடைப்பிடிக்கிறாங்க.

வைரமுத்து

எனக்கும் அப்பாவுக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. என் மனைவியும் சாமி கும்பிட மாட்டாங்க. அதை யார்மீதும் நாங்க திணித்ததும் இல்லை. என் அம்மாவுக்கும் தம்பிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அம்மா என்னை கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னால் அவங்களைக் கூட்டிட்டுப் போவேன். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதற்காக நாங்க கடவுள் எதிர்ப்பாளர்கள் கிடையாது.”

Leave a comment