கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறியதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவ பிரியராக இருந்தார். தினமும் அவரது உணவில் ஏதாவது அசைவ உணவு இருக்கும்.
அந்த அளவுக்கு அசைவ உணவை விரும்பி சாப்பிட்டு வந்தார். திடீரென்று கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறினார். அதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணமாகும்.
கருணாநிதி, தொண்டர்கள் மீது மட்டுமல்ல வளர்ப்பு பிராணிகள் மீதும் அதிக பாசம் வைத்திருந்தார். வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வந்தார்.
கருப்பு நிறம் கொண்ட நாய் மீது கருணாநிதி அதிக பிரியம் செலுத்தி வந்தார். அவர் என்ன உணவு சாப்பிடுகிறாறோ அதை அந்த நாய்க்கும் கொடுப்பார். அவரிடம் நாய் துள்ளி குதித்து மடியில் ஏறி விளையாடும்.
இதுகுறித்து கனிமொழி கூறுகையில், “கருப்பு நாய் மீது அதிகம் பாசம் வைத்திருந்த கலைஞர் அது இறந்ததால் சோகம் அடைந்தார். அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம். அது நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வைத்தோம்.
நாய் திடீரென்று இறந்தது கலைஞரை மிகவும் பாதித்தது. அதனால் அவர் அசைவ உணவு சாப்பிடுவதை 2 ஆண்டுகள் நிறுத்தி விட்டார். மருத்துவ காரணங்களுக்காக அசைவ உணவு சாப்பிட டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்” என்றார்.
கவிஞர் இளையபாரதி கூறுகையில், “ஒருமுறை ராஜாத்தி அம்மாள் கீழே கிடந்த உலர் திராட்சையை மிதித்து வழுக்கி விழுந்து காலில் காயம் அடைந்தார். அன்று முதல் அந்த கருப்பு நிற நாய் உலர்திராட்சையை வீசினாலும் சாப்பிடாது. அந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தது” என்றார்.

