மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு எதிராக பெரிய ஆதாரம் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே வரும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.
துகுறித்து திமுக அவசர வழக்கு தொடுத்தது. இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் முன்பு விசாரிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜரானார். மறுபக்கம் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர். இளங்கோ, கண்ணதாசன், ஆர். எஸ் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். தற்போது வழக்கு விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், அரசு ஸ்டாலினிடம் சட்ட சிக்கல் இருப்பதாக கூறினார். ஆனால் அனுமதி அளிப்பதில் என்ன சட்ட சிக்கல் என்று நீதிபதிகளிடம் அரசு கூறவில்லை. ஆனால் ஏன் அனுமதி அளிக்க கூடாது என்று சில காரணங்களை தெரிவித்தார்கள்.
திமுக தரப்பில் தலைவர் கருணாநிதி குறித்து எடுத்துரைத்தோம். 5 முறை முதல்வராக இருந்தவரை இப்படி அவமதிக்க கூடாது என்று கூறினோம். இந்த வழக்கில் பதில் மனு தேவையில்லை. ஆனாலும் அரசு தரப்பிற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது என்று நீதிபதிகள் கூறினார். காலை இதுகுறித்து விசாரிக்கப்படும். காலை தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளனர். கண்டிப்பாக தீர்ப்பு சாதகமாக வரும் என்று நம்புகிறோம்.

