மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு அரசியல் செய்ய வந்த அப்புக்காத்துக்களின் கேவலமான செயல்!

251 0

மணிவண்ணன் அவர்கள் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது அரசியல் செய்ய வந்த அப்புக்காத்துக்களின் கேவலமான அரசியல் என கடுமையாகச் சாடிருக்கும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் குறித்த வழக்கு ஒரு பொது நோக்கமும் அற்றது என்றும் இது சட்டத்தை குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உபகாரணப்படுத்தும் ஒரு அருவருக்கத்தக்க என்றும் வர்ணித்திருக்கிறார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அவர்,

மணிவண்ணன் அவர்கள் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்காலக் கட்டளையை சிலர் முன்னணியின் மோசடியை அம்பலப்படுத்துவதாக அலம்புகின்றனர். சிலர் அரசியல் அரங்கில் அப்புக்காத்துக்களின் புத்திசாலித்தனமாக மெச்சுகின்றனர். மேற் சொன்ன இரண்டுக்கும் இந்தப் பதிவில் எதிர்வினை ஆற்ற விழைகின்றேன்.

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான சட்டம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடும் உள்ளூராட்சி சபையின் ஆள்புல எல்லைக்குள் சாதாரணமாக வசிப்பவராக (ordinarily resident) இருக்க வேண்டும் என குறிப்பிடுகின்றது. (Section 7 (1) (b) of the Local Authorities Elections Ordinance) இதிலே கவனிக்க வேண்டிய விடயம் வதிவிடதாரராக குறிப்பிட்ட நபர் இருப்பது போதுமானது என்பது தான். அவர் அந்த உள்ளூராட்சி சபைக்குட்பட்ட இடமொன்றின் தேர்தல் இடாப்பில் (electoral register) இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது மிகத் தெளிவாக சட்டத்தில் பெறப்படுகின்றது.

தமிழரசுக் கட்சி மணிவண்ணனுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் அவர் கொக்குவிலில் ஒரு பாடசாலையில் தனது வாக்குரிமையை செலுத்தினார் என்று குறிப்பிடப்படுகின்றது. (இது உப்புச் சப்பற்ற வாதம். அவர் தேர்தல் இடாப்பில் இருக்க வேண்டியதில்லை என்றால் எங்கு பதிவு இருக்கிறதோ அங்கிருந்து வாக்களிக்கலாம்) அதைத் தவிர தேர்தல் நியமன பட்டியலில் (electoral register) குறிப்பிடப்படும் முகவரியில் அவர் இருப்பதை தம்மால் கண்டறிய முடியாமல் இருந்தது என்று குறிப்பிடப்படுகின்றது. அதைத் தவிர மாநகர சபையின் பதிவில் மணியின் தபால் முகவரியாக அவரது தகப்பனாரின் வீட்டு முகவரி குறிப்பிடப்பட்டிருந்தமையையம் சுட்டிக் காட்டியிருந்தார்கள். (தபால் முகவரியாக என்ன முகவரியும் கொடுக்கலாம்)

மணிவண்ணன் தனது ஆட்சேபணையில் தனது பெயரில் நியமனப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரி கொண்ட ஆதனம் தனது பெயரில் இருப்பதாகவும் அது மாநகர சபை எல்லைக்குள் இருப்பதாகவும், தான் அந்த ஆதனத்தை வாங்குவதற்கு முன்னர் மாநகர சபைக்குட்பட்ட தனது சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் அவ்வப்போது வசித்து வந்தமையையும் குறிப்பிட்டு தனது தொழில் சார், சமூகம் சார், கலாசார செயற்பாடுகள் யாவும் மாநகர சபையின் எல்லைக்குட்பட்டு இருந்தமையையும் பட்டியல் இட்டிருந்தார் (படித்த பாடசாலை, அங்கம் வகிக்கும் கிரிக்கெட் கிளப் போன்ற இன்ன பிற விடயங்களை பட்டியல் இட்டிருக்கிறார்) . இங்கே ;வதிவிடம் ; என்பது என்ன என்பது தான் கேள்வி. வெறுமனே ஒருவர் எங்கு இரவு நேரத்தில் உறங்குகிறார் என்பது மட்டும் தானா அல்லது அவரின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை வைத்து பார்க்கப்பட வேண்டுமா? பின்னையது என்பது தான் மணிவண்ணனின் வாதம். சட்டத்தின் நோக்கம் அந்த வாதத்தோடு முரண்படாத ஒன்று என நானும் கருதுகிறேன்.

மிகப் பலவீனமான காரணங்களை கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்ட இடைக் காலக் கட்டளையை கௌரவ மன்று வழங்கியிருப்பது அதுவும் மாநகர சபையின் எதிர்க்கட்சியின் தலைவரை கூட்டங்களில் பங்குபற்றவிடாமல் தடை விதித்துள்ள பெரும் சுமையை விதிக்கும் கட்டளை எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. முகத் தோற்றமளவில் (prima facie) வழக்கை நிரூபித்தால் தான் இடைக் காலக் கட்டளை கிடைக்கும். மனுவில் குறிப்பிடப்படும் எந்த காரணங்கள் முகத்தோற்றமளவில் மன்றை திருப்திப்படுத்தின என்பது எனக்கு விளங்கவில்லை. நிற்க.

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் ஏன் வதிவிடத்தை ஓர் நிபந்தனையாக முன்வைக்கின்றது? அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு அறிமுகமான ஒருவர் அந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும். அப்போது தான் அவர் உள்ளூர் பிரச்சனைகளை பற்றிய விளக்கமுடையவராக இருப்பார்; பொறுப்புக் கூறுவார். இந்த அடிப்படையில் மணிவண்ணன் யாழ்ப்பாணத்து டவுண் பெடியன் என்பதில் யாருக்கு சந்தேகம்? மணிவண்ணனுக்கு இந்த நகரத்தின் சந்து பொந்து எல்லாம் தெரியும். பிரச்சனைகளும் தெரியும். வழக்கு கூடுதலாக பேசுவதும் நகரத்துக்குள் தான். கிரிக்கெட் மைதானங்கள் எல்லாம் அத்துப்படி. இப்படி அவன் தான் என்பதற்கு பல்வேறு விடயங்களை முன்வைக்கின்றான். இதை எல்லாத்தையும் விட தேர்தலில் முன்னணியின் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு மக்கள் வாக்கு சேகரிக்கப்பட்டது. எனவே மாநகர மக்களுக்கு நன்கு அறிமுகமான அவன்.

தமிழரசுக் கட்சிக்கு இது நன்கு தெரியும். மக்களின் வாக்குகள் ; பண்ணி வந்த ஒருவனுக்கு விழுந்து விட்டது என அவர்கள் நிச்சயம் துடிக்க இங்க ஒரு பிரச்சனையும் இல்லை. சட்டம் வதிவிடத்தை தேவைப்படுத்தும் நோக்கம் நிச்சயமாக முறியடிக்கப்படவில்லை. அப்ப ஏன் அவனை தட்ட துடிக்க வேண்டும்? மணிவண்ணனதும் அவனது கட்சியினதும் அரசியல் விருத்தியைக் கண்டு அஞ்சித் தான். வேறெந்த விளக்கமும் இல்லை. முன்னணி சட்டத்தின் நோக்கத்தை மீறி விட்டது மோசடி செய்து விட்டது என்று கூறுவதெல்லாம் வெறும் பிரச்சாரம். சட்டத்தை மதிக்காத, பொது ஒழுங்கை மீறும் கட்சி என தொடர்ந்து முன்னணியின் பிம்பத்தை சட்டம் கொண்டு சிதைக்க எடுக்கும் முயற்சி. சட்டத்தை கொண்டு அரசியல் அரங்கை குறுக்க பார்க்கும் முயற்சி. இந்த வழக்கு, அரசியல் செய்ய வந்த இந்த அப்புக்காத்துக்களின் கேவலமான ; அரசியல். இதற்கு ஒரு பொது நோக்கமும் இல்லை. இதை புத்திசாலித்தனம் எனக் கொண்டாடும் சட்ட மனமும் எனக்கில்லை. சட்டத்தை குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உபகாரணப்படுத்தும் ஒரு அருவருக்கத்தக்க lawfare என்றார்.

Leave a comment