திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது. இதில், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கமிஷ்னரருடனான ஆலோசனைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

