விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை

343 0

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.

அந்த தீர்ப்பாயம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி, விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து, தடையை நீட்டிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி மத்திய அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.

இதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இதன்படி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அப்போது மத்திய அரசு வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை. இந்த உத்தரவை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம்தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a comment