அகிலேஷ் யாதவ் தங்கியிருந்த அரசு பங்களாவை சேதப்படுத்தியவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.11 லட்சம் பரிசாக வழங்க தயார் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்மந்திரிகளான, முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ், ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை கடந்த சில தினங்களுக்கு முன் காலி செய்து அரசிடம் ஒப்படைத்தனர்.
அகிலேஷ் யாதவ் அரசு பங்களாவை காலி செய்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துசென்று விட்டதாகவும், பங்களாவின் சமையல் கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா உள்ளிட்ட இடங்களை அவர் சேதப்படுத்தி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு அகிலேஷ் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லக்னோ நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், அரசு பங்களாவை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை யாராவது கண்டுபிடித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு, சமாஜ்வாடி கட்சியினரிடம் தலா ரூ.2,000 ஆயிரம் நன்கொடை வசூலித்து ரூ.11 லட்சம் பரிசாக வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.