இம்மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச இளைஞர் தினத்தை பிரதிநிதித்துவப்படுத்துவற்கு
கண்டி மாவட்டத்திலிருந்து 60 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தயானி ஆரச்சி தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின்பங்களிப்புடன் செயற்படுத்துவற்கென 60 செயற்திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ஒரு செயற்திட்டத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் வீதம் கிடைக்கப்பெறவுள்ளன.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள செயற்திட்டங்கள் கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மனித சிரம பங்களிப்புடன் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு செயற்திட்டமும் பூர்த்தியடையும்போது அதன் பெறுமதி ஆறு இலட்சம் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றன.
கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் தின தேசிய நிகழ்வுகளின் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்களுக்கான நிதி காசோலை மூலம் வழங்கி வைக்கப்படவுள்ளன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் காலங்களில் இளைஞர் முகாம், இளைஞர் கழக விளையாட்டு போட்டிகள், இளைஞர் பாராளுமன்றம், கலை கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கண்டி மாவட்டத்தில் பிரதேச செயலாளர் அலுவலக ரீதியாக இருக்கின்ற இளைஞர் சேவைகள் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சகல செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

