புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு: சம்பந்தனிடம், பொதுநலவாய செயலாளர் நாயகம் உறுதி!

200 0

ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும், முழுமையான அமைதியும், சமாதானமும் மக்களிடையே இல்லை என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட்விற்கும், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதே எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மக்கள், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும், நாட்டு மக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசாங்க கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நஷ்ட ஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு, மிக கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும்.

எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் பிரேரணையானது நாடாளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரசாங்க தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது நாட்டினை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லும் மிகப் பாரிய ஒரு கருமமாகும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் ஜனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல் மாசடைதலை தவிர்த்தல் உள்ளிட்ட பல விடயங்களில் பொதுநலவாய செயலகத்தின் பங்களிப்பு தொடர்பில் பொதுநலவாய செயலாளர் நாயகம், இரா.சம்பந்தனிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு தமது பணியகம் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் மிதமான தமது செயல்களின் மூலம் சமாதானத்திற்கான ஒரு தூதுவராக இரா. சம்பந்தன் இருப்பதாகவும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a comment