முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களம் மீது தாக்குதல் ; விசாரணைகள் ஆரம்பம்!

233 0

முல்லைத்தீவு கடற்கரைவீதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற்தொழிலை தடைசெய்யுமாறும் முல்லைத்தீவு கடற்பரப்பில் சுருக்குவலைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை இரத்துசெய்யுமாறுகோரியும் நேற்றையதினம் முல்லைத்தீவு நகரில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தினை முற்றுகையிட்டு தமதுகோரிக்கையினை ஏற்று நடவடிக்கையை எடுக்குமாறு கோஷங்களை எழுப்பினர். தம்மை நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் சந்திக்கவேண்டும் என திணைக்கள வாயிலில் காத்திருந்த நிலையில் பலமணிநேரமாக எவரும் சந்திக்காதநிலையில் ஆத்திரமடைந்த மீனவர்கள் சுற்றுவேலிகளை உடைத்துக்கொண்டு உள்ளேசென்று திணைக்களம் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் .இதனால் திணைக்களத்தின் சொத்துக்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் . இதன்பிரகாரம் நேற்று மாலை கிளிநொச்சியில் இருந்து வருகைதந்த தடயவியல் பொலிஸார் திணைக்கள கட்டடத்தை பார்வையிட்டு விசாரணைக்கான தடயங்களை பதிவுசெய்துள்ளனர்.

Leave a comment